×

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில் குப்பை குவியல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

தாம்பரம், ஏப்.29: தாம்பரம் மாநகராட்சி, செம்பாக்கம் பகுதிகளில் குப்பை கழிவுகள் முறையாக அகற்றப்படாமல், ஆங்காங்கே குவியலாக காட்சியளிப்பதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, இதனை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை கழிவுகளை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் அகற்றி வருகிறது.

இவ்வாறு, தினமும் சேகரிக்கப்படும் பல டன் குப்பை கழிவுகள் மாடம்பாக்கம், விசேஷபுரம், சீனிவாசபுரம், கன்னடபாளையம் பகுதியிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, பின்னர் அங்கிருந்து மறைமலைநகர் அருகே உள்ள ஆப்பூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலத்துக்குட்பட்ட செம்பாக்கம் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் சாலையோரம் உள்ள குப்பை கழிவுகளை கடந்த சில நாட்களாக அகற்றாததால், ஆங்காங்கே குவியலாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்கள் எங்களது பகுதியில் குப்பையை அகற்றாததால், ஆங்காங்கே சாலை ஓரங்களில் குப்பை குவியலாக உள்ளது.

41வது வார்டுக்கு உட்பட்ட மசூதி காலனி, பெரேகா நகர், வைகை தெரு, குருசாமி நகர் விரிவு, பாலாஜி தெரு, அனுமான் தெரு, குருசாமி நகர் மெயின் ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இதே நிலை நீடித்து வருகிறது. குப்பை கழிவுகள் மற்றும் மரக்கழிவுகள் அதிகரித்து உள்ளதால், அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்களில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்,’’ என்றனர். இதுகுறித்து மண்டல சுகாதார அலுவலர் கூறுகையில், ‘தினமும் 2 முறை சுழற்சி முறையில் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுதான் வருகிறது,’’ என்றனர்.

The post தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில் குப்பை குவியல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Sembagam ,Tambaram ,Sembakkam ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...